Manonmani in Tantra and Siddhanta is both a high spiritual state where the mind dissolves into pure awareness (mano = mind, unmani = beyond mind) and a fierce yet compassionate form of the Divine Mother Shakti. She represents the silent void of supreme consciousness beyond thought. [1, 2, 3, 4]
- Beyond Thought: The Unmani or Manonmani state is where mental activity stops, identity fades, and only luminous awareness remains. [1, 2]
- The Transcendent Void: In Siddha Tantra and Kashmir Shaivism, she is the energy that rests in absolute stillness, devouring compulsive thoughts. [1]
- Energetic Location: Often linked to the subtle spaces just below the crown chakra (Sahasrara), where individual consciousness merges into universal reality. [1]
- Nervous System Transformation: Worship of Manonmani is internal—shifting the biological and psychological system from chaotic turbulence to profound silence. [1, 2]
- Scriptural Roots: Mentioned in texts like the Tirumantiram(402), Vijnana Bhairava Tantra, and various Śaiva Āgamas as the supreme consort or active will (Shakti) of Sadasiva
402: Names of Glories of Maya Sakti
She is Manonmani, the ample-bosomed;
Mangali, the ever auspicious;
Varani of elephant form
Arani of haunting forests
Mohini of tempting beauty
Poorani--the Perfect Being,
Cause-Effect conjoint in one
--She, Consciousness beyond Consciousness.
மனதை அமைதிப்படுத்தி மகிழ்விக்கும் மனோன்மணி
மனோன்மணி-மனங்களைத் தட்டி எழுப்புபவள். ஆன்மாக்களின் குற்றங்களை நீக்கிப் பரம்பொருளை அடைவதற்கு வழிகாட்டுபவள். இந்த அன்னை பல இடங்களில் இந்த திருநாமத்தில் அருள் வெள்ளம் பெருக்குகிறாள். திருவாரூர் நாயகியாம் கமலாம்பிகையின் உற்சவர் நாமமும் மனோன்மணிதான். கமலாம்பிகையே யோகத்தின் வடிவம்தானே! அவள் உற்சவ ரூபமும் யோக வடிவே. நெல்லை மாவட்டம் நாங்குநேரி (வைணவ மரபில் தோதாத்ரி சீவரமங்கை) தலத்திற்கு அருகில் இருக்கும் வடக்கு விஜய நாராயணம் தலத்திலும் அன்னை மனோன்மணி சமேத மனோன்மணீஸ்வரர் ஆலயம் உண்டு.
இந்த மனோன்மணி அன்னை யார்? அவளின் வேலை என்ன? மனித மனம் இயல்பாகவே அலை பாயும் தன்மை கொண்டது அல்லவா? மனம் ஒன்றி நாம் இறைவனோடு பொருந்தி இருந்தாலும் பல நேரங்களில் நம் மனம் அதை விட்டு அடிக்கடி விலகி விடுகிறது.
இப்படி மனம் பல சமயங்களில் வைராக்கியத்தை இழக்கும்போது அதை மீட்டு நமக்கு தரும் அன்னை இவள். அது மட்டுமா? சாக்த மரபில் (பெண் தெய்வ வழிபாட்டில்) அன்னையின் அழகை வர்ணிக்கும்போது பெண்மையின் அடையாளங்கள் பற்றி சொல்லப்படும். அந்த நேரத்தில் மனம் கிளர்ச்சி அடையக் கூடாது. அவ்வாறு மனித மனதில் தோன்றும் தீய எண்ணங்களை மாற்றி மனதுக்கு இதம் அளிப்பவளாக விளங்குகிறாள் அன்னை. இதே எண்ணத்தில்தான் அபிராமி பட்டரும்,
“பொருந்திய முப்புரை செப்புரை செய்யின்
புணர்முலையாள்
வருந்திய வஞ்சி, மருங்குல் மனோன்மணி
வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை
அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என்
சென்னியதே”
- என்கிறார்.
இங்கே அன்னையின் திரு மார்புகளை பற்றி சொன்ன அபிராமி பட்டர் மனித மனத்தை சீர் செய்யவே அன்னையின் திருநாமத்தை பொருத்தி இருக்கிறார். மேலும் அந்த பாடலின் திரண்ட பொருளிலும் ‘நஞ்சை அமுதாக்கிய’ பதங்கள் வரும். ஆக நம்முடைய மனதில் தோன்றும் நஞ்சை (தீய எண்ணங்களை) அமுதாக்கும், (நல்லவையாக) மாற்றும் அன்னை இவள் என்பதும் திண்ணமாய் விளங்கும். மேலும் குண்டலினி தவ முறையிலும் மனோன்மணி தவம் வரும். அங்கேயும் ஒரு மணியின் ஒலியை கேட்கச் செய்து தவம் பூர்த்தி ஆகும். அந்த பொழுதில் நம் மனதில் நினைப்பவை உடனேயே நடக்குமாம். ஆக மனோன்மணி என்பவள் மனதை சீர் செய்து, அது நேராக இருக்க வழி வகுப்பவள். புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி கரங்களை உயர்த்தி சின்முத்திரையால் சதாசிவ லிங்கத்தைப் பிடித்த நிலையில் அருள்பவள். உச்சந்தலை நடுவிலுள்ள ஸஹஸ்ரார சக்கர மத்தியில் 1000 இதழ் கொண்ட ஸஹஸ்ர பத்ம மத்தியில் ஸர்வ சக்தி படைத்த ஸதாசிவ பிரம்மத்தை உணர்த்துபவள்.
இந்த குண்டலினி யோகம் மூலம் அனைத்து நோய்களையும் வெல்லலாம்; மனித மூளையை பேராற்றல் உடையதாக மாற்றலாம். இதன் மூலமே நமது சித்தர்கள் நம் கற்பனைகூட செய்யமுடியாத செயல்களை செய்து அவர்களுடைய அனுபவங்களை நமக்கு பொக்கிஷமாக அளித்துள்ளனர். மரணம் இல்லா பெருவாழ்வு மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு சக்கரங்கள் ஆதாரமாய்த் திகழ்கின்ற போது, மூன்று நாடிகளால் இவை ( இடகலை , பிங்கலை, சுழுமுனை) இரண்டிரண்டாய் பின்னப்படுகின்றன. இரண்டு சக்கரங்கள் சேருமிடம் ஒவ்வொன்றும் ஒரு முடிச்சு (கிரந்தி) எனப்படும். மூன்று கண்டங்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆதாரங்கள் ஆறும் கடந்தால் அங்கிருந்து அதாவது, புருவ மத்தியிலிருந்து “பிரம்ம ரந்திரம்” என்ற பகுதிவரை எட்டு பகுதிகள் உள்ளன என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவை இந்து, ரோதினி , நாதம், நாதாந்தம், சக்தி, வியாபினி, சுமணி, மனோன்மணி ஆகியவையாகும்.
ஆறு என்பது அற்புதமான எண். பரதேவதையின் ஆளுமைக்குட்பட்ட எண். சுக்கிர கிரகத்திற்கு அடையாளமாக உள்ள எண். அம்பிகை மனித உடலில் ஆறு ஆதாரங்களாக விளங்குபவள். இதனால் தேவி ஷட்சக்ரமாதா எனப் போற்றப்படுகிறாள். மூலாதாரத்திலுள்ள பிரும்ம கிரந்திகள் இரண்டையும் மணிபூரகத்திலிருக்கும் விஷ்ணு கிரந்திகள் இரண்டையும் அனாகதத்திலுள்ள ருத்ர கிரந்திகள் இரண்டையும் குண்டலினி சக்தி உருவம் தாங்கி ரட்சிப்பதால் ‘ஷட்கிரந்தி ரக்ஷணி’ என்றும் தேவி வணங்கப்படுகிறாள். பதம், புவனம், வர்ணம், தத்வம், கலை, மந்திரம் எனும் மந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்ட ஆறுவகை உபாசகர்களுக்கு வழியில் உள்ள இருளை அகற்றி அவ்வழிகளில் உபாசிக்க அருள்வதால் ‘ஷடத்வத்வாந்த தீபிகா’ எனப் போற்றப்படுகிறாள்.
ஹ்ருதயம், சிரஸ், சிகை, கவசம், நேத்ரத்ரயம், அஸ்திரம் எனும் ஆறு விதமான சக்திகளால் சூழப்பட்டவள் அம்பிகை. அங்கந்யாஸம், கரந்யாஸம் செய்யும் பக்தர்களை இந்த ஆறுவித சக்திகளும் காப்பாற்றுகின்றன. நாம் பிறந்தது முதல் இறுதி மூச்சு விடும்வரை நம்மோடு கூடவே இருந்து நமக்கே தீங்கிழைக்கும் பகைவர்கள் ஆறுபேர். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகியவையே அந்தப் பகைவர்கள். தேவி அவற்றை அழிப்பதால் ‘ஷட்வைரிவர்க வித்வம்ஸீ’ என்று உபாசிக்கப்படுகிறாள். பரதேவதை நம் உடலில் ஆறு ஆதாரங்களில் விளங்கி ஸஹஸ்ராரத்தில் ஈசனுடன் கூடி மகிழ்ந்திருக்கிறாள். ஆறு ஆதாரங்களும் காலத்திற்கு உட்பட்டவை. அதற்கு மேலே விளங்கும் தேவியின் திருவடிகள் காலத்தைக் கடந்தவை.
அந்த ஆதாரங்களை சக்கரங்கள் என்பர். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பவையே அவை. இவற்றை நம் உடலில் அருளும் சக்திபீடங்கள் எனலாம். இந்த ஆதாரங்களில் உருவாகும் சக்தியே நம் உடல் முழுதும் வியாபித்து அதனை இயக்குகிறது. இச்சக்தி பீடங்களின் நாயகியாய் அருள்பவள் சாட்சாத் ஆதிபராசக்தியான ராஜராஜேஸ்வரி. அச்சக்தியே வெவ்வேறு வடிவங்களில் நம் ஆதாரங்களில் இயங்கியருள்கிறது. அந்த ஆதாரத்தில் அருளும் வடிவங்களான தேவியரை யோகினிகள் என்பர். ஸாகினி, காகினி, லாகினி, ராகினி, டாகினி, ஹாகினி ஆகியோரே அந்த தேவியர். வாக்தேவியான நாமகளின் பல அம்சங்கள் வாக்தேவிகள் என்றே வணங்கப்படுகின்றனர். அவர்கள் நம் உடலில் உள்ள ஆதார சக்கரங்களில் எழுந்தருளி சக்தியூட்டுகின்றனர். தலையில் வசினி, நெற்றியில் காமேஸ்வரி, புருவமத்தியில் மோதினீ, கழுத்தில் விமலா, ஹ்ருதயத்தில் அருணா, நாபியில் ஜயினீ, ரகஸ்ய ஸ்தானத்தில் சர்வேஸ்வரி, மூலாதாரத்தில் கௌளினீ ஆகியோர் எழுந்தருள்வதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆறு ஆதாரங்களும் ஆறு ருதுக்களுடன் ஒப்பிடப்படுகின்றன. மூலாதாரம் 55 நாட்கள் கொண்ட வசந்த ருதுவோடும் மணிபூரகம் 52 நாட்கள் கொண்ட க்ரீஷ்ம ருதுவோடும் சுவாதிஷ்டானம் 62 நாட்கள் கொண்ட வர்ஷ ருதுவோடும் அனாகதம் 54 நாட்கள்கொண்ட சரத் ருதுவோடும் விசுத்தி 72 நாட்கள் கொண்ட ஹேமந்த ருதுவோடும் ஆக்ஞை 65 நாட்கள் கொண்ட சிசிர் ருதுவோடும் ஒப்பிடப்படுகின்றன. நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களும் நம் நாட்டில் பிரசித்தி பெற்ற தலங்களாக விளங்குகின்றன! இத்தலங்களை பரஞ்ஜோதி முனிவர் தனது திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்: பிருத்வி தலமான திருவாரூர், மூலாதாரம். அப்புத் தலமான திருவானைக்கா, ஸ்வாதிஷ்டானம். தேயு தலமான அண்ணாமலை, மணிபூரகம், ஆகாயத் தலமான சிதம்பரம் அனாகதம். வாயுத் தலமான காளஹஸ்தி, விசுத்தி. மனம் அல்லது புத்தித் தலமான காசி, ஆக்ஞை ஆகும்.
ஆறு சக்கரங்களிலும் அன்னை பராசக்தியே அமர்ந்து ஆட்சி செய்கிறாள் என்பதனை வீரைகவிராயர் எனும் கவி தன் பாடலில் அருமையாக குறிப்பிட்டுள்ளார்: ‘உமாதேவியே, நீயே ஆக்ஞையில் மனமாய் இருக்கிறாய், விசுத்தியில் ஆகாயமாய் இருக்கிறாய், அனாகதத்தில் காற்றாய் இருக்கிறாய், ஸ்வாதிஷ்டானத்தில் நெருப்பாய் இருக்கிறாய். மணிபூரகத்தில் நீராய் இருக்கிறாய். மூலாதாரத்தில் பூமியின் ஆதாரமாகி வையமெல்லாம் ஒளிர்கிறாய். நீயே பூமாதேவியாய் இருந்து கருணை பொழியும் அன்னையாய் சக்தி வடிவு கொண்டாய்’ என்பதே இப்பாடலின் பொருள். பிறவியிலேயே பேச்சிழந்தவனாய் குறைகொண்டு, காமாட்சியின் தாம்பூல உமிழ்நீரை அருந்தியதால் கவியான மூககவி, ஐநூறு பாடல்களை ‘மூகபஞ்சசதீ’ எனும் தொகுப்பாக காமாட்சியைக் குறித்துப் பாடியருளினார்.
அதில் ஸ்துதி சதகத்தில் ‘ப்ரதீசீம்’ எனும் துதியில் ஆறு ஆதார சக்திகளானவளும் சக்கரங்களான பத்மங்களை உடையவளும் உயர் நோக்கு உள்ளவளும் ஸுக்ஷூம்னா மார்க்கத்தில் நடப்பவளும் உயர்ந்த ஸ்தானமாகிய சிரஸிலுள்ள சந்திரனிடமிருந்து பெருகுகிற அம்ருதத்தில் நனைபவளுமான அம்பிகைக்கு நமஸ்காரம் என துதித்தருளியுள்ளார். முருக பக்தர்கள் மூலாதார தலமாக திருப்பரங்குன்றத்தையும் ஸ்வாதிஷ்டான தலமாக திருச்செந்தூரையும் மணிபூரகமாக திருவாவினன்குடியையும் அனாகதமாக திருவேரகத்தையும் விசுத்தியாக பழமுதிர் சோலையையும் ஆக்ஞாவாக குன்றுதோறாடலையும் கருதி வழிபடுகின்றனர்.
ஐயப்ப அடியார்கள் மூலாதார தலமாக சொரிமுத்து ஐயனாரையும் ஸ்வாதிஷ்டான தலமாக அச்சன் கோயிலையும் மணிபூரகத் தலமாக ஆரியங்காவையும் விசுத்தி தலமாக பந்தளத்தையும் ஆக்ஞா தலமாக சபரிமலையையும் போற்றிப் புகழ்கின்றனர். பரதேவதையின் வடிவமே ப்ரக்ருதியாக இருந்து ஐம்பூதங்களாக உருவாகிறது. ஐம்பூத வடிவமான சக்கரங்களின் மூலம் குண்டலினி பயணம் செய்யும்போது பக்தி எனும் மலர் மெல்ல இதழ் விரிக்கிறது. ஆறு ஆதார சக்தி களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் நுழையும்போது பக்தி பிரவாகமாகப் பெருக்கெடுக்கிறது. அங்கே பிரம்மத்திற்கு அர்ப்பணம் நடைபெறுகிறது. நம் பூமி உட்பட ஒவ்வொன்றும் ஒரு ஆதாரத்தைக் கொண்டே இயங்குகின்றன. பூமி அச்சில் சுழல்கிறது. அதேபோல் நம் உடலின் அச்சாகக் கருதப்படுவது நம் முதுகெலும்பாகும்.
அதற்கு வீணாதண்டம் என்றும் பெயருண்டு. அந்த முதுகெலும்பின் பாதையில்தான் ஆதார சக்திகளான ஆறு சக்கரங்களும் அமைந்துள்ளன. நம் உடலில் ஓடும் எல்லா நாடிகளும் நரம்புகளும் இந்த சக்கரங்களுடன் தொடர்புடையவை. இந்த சக்கரங்கள் அதி சூட்சுமமானவை. அவற்றை சக்தி முடிச்சுகள் என்பர். அதன் சக்தி குன்றும்போது நம் உடல் நலமும் குன்றுகிறது. அந்த சக்கரங்களின் ஆரம்ப இடம் மூலாதாரம் எனப்படும். அதன் மேல் சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற சக்கரங்கள் வரிசையாக உள்ளன. மூலாதாரத்தில் சக்தி பாம்பு வடிவில் சுருண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சக்தியை தட்டி எழுப்பி அதனை ஆறு ஆதார சக்கரங்கள் மூலமாக மேலே செல்வதைத்தான் குண்டலினி யோகம் என்கிறோம். ஆறு ஆதாரங்களையும் கடந்த சக்தி, இறுதியில் ஸஹஸ்ராரத்தில் நுழைகிறது. அங்குசத்தால் யானையை அடக்கும் பாகன் போல பிராணவாயுவை இடை பிங்கலை வழியாக வீணாக்காமல் ஆறு ஆதார சக்கரங்கள் வழியே செலுத்த வேண்டும்.
இதைத்தான் ஔவைப்பிராட்டி தன் விநாயகர் அகவலில், ‘ஆறாதார அங்குச நிலையை பேறா நிறுத்தி பேச்சுரையறுத்தே’ என்கிறார். நம் உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் பிரம்ம நாடி மட்டும் உடல் முழுவதும் செல்கிறது. இதுவே உயிர் நாடி. மரணத்தின்போது உயிர் இந்த நாடி வழியாகத்தான் வெளிச்சென்று இறைவனை அடைகிறது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த 72,000 நாடிகளில் முக்கியமானவை 24. இவற்றில் இடகலை, பிங்கலை மற்றும் ஸுக்ஷூம்னா நாடிகள் அதிமுக்கியமானவை.
இடகலையை கங்கை என்றும் பிங்கலையை யமுனை என்றும் ஸுக்ஷூம்னாவை சரஸ்வதி என்றும் கூறுவர். ஸுக்ஷூம்னா நாடி மூலாதாரத்திலிருந்து இதயம் மூலமாக உச்சந்தலை வரை செல்கிறது. இந்த நாடிக்கு வலதுபுறம் பிங்கலையும் இடதுபுறம் இடைகலையும் ஓடுகின்றன. ஸுக்ஷூம்னா நாடியே ஸாம்பவி சக்தி என்று கூறப்படுகிறது. இம்மூன்று சக்திகளும் ஆக்ஞா சக்கரத்தில் (புருவ மத்தியில்) கூடுகின்றன. இதன் பொருட்டே இந்துக்களின் வாழ்வில் புருவமத்தி பெரும் பங்கு வகிக்கிறது. ஆக்ஞா சக்கரம் நல்ல முறையில் செயல்படுவதற்காகவே அந்த இடத்தில் சந்தனம், குங்குமம் போன்ற குளிர்ச்சியான மங்கலப்பொருட்களை அணிந்து கொள்கிறோம்.
மூலாதாரம் என்பது பிறந்த வீடு. ஸஹஸ்ராரம் என்பது புருஷன் வீடு. புருஷன் வீட்டிற்கு அழைத்துப் போனாலும், அடிக்கடி பிறந்த வீட்டிற்கு வருவது சில பெண்களின் வழக்கம். சில பெண்கள் தங்கள் புருஷ னையே பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து விடுவர். மீனாட்சி அம்மன் விஷயத் தில், புருஷன் மாமியார் வீட்டிற்கே வந்து விட்டார். ஆனால், இந்த ஸஹஸ்ராரத்தில் உள்ள புருஷன் மிகவும் பிகு செய்பவர். மனைவி தன்னைத் தேடி வரட்டுமே என்ற மனப்பான்மை கொண்டவர். சாதகன் பெரு முயற்சி செய்து இந்த குண்டலினி அம்பிகையை எழுப்பி அவளுடைய கணவனிடம் அனுப்ப வேண்டியதாயிருக்கிறது.
மூலாதாரத்தில் அம்பிகை பாம்பின் வடிவத்தில் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள். ஜீவசக்தியான குண்டலினியின் சுவாசம்தான் பிராணன். தேவி மூலாதாரத்திலிருந்து கிளம்பி சுவாதிஷ்டானத்தையும் கடந்து மணிபூரகத்தில் பிரசன்னமாகும்போது அவளுக்கு பாத்யம், அர்க்யம் முதல் பூஷணம்வரை உபசாரம் செய்து, அனாகதம் தாண்டி விசுத்திக்கு அழைத்து வந்து, அங்கு சிம்மாசனத்தில் அமரச் செய்து, பூஜித்து அங்கிருந்து ஆக்ஞா சக்கரத்திற்கு எழுந்தருளப் பண்ணி நீராஞ்சனம் காட்டி பின் ஸஹஸ்ரார கமலத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள சித்சக்ர மண்டபத்தில் ஈசனுடன் சேர்ப்பிக்க வேண்டும். அதுவே மகாபிந்து எனும் ஸ்தானம்.
குண்டலினி சக்தி அங்கு வந்து மகாபிந்துவை அடைந்த மாத்திரத்தில் அமிர்தம் பெருகும். அந்த ஸ்தானத்தில்தான் சதாசிவனும் மனோன்மணியும் இணைந்து அர்த்தநாரியாக விளங்குகின்றனர். அந்த மனோன்மணி சக்தியே மகாதிரிபுரசுந்தரி. மூலாதாரத்தில் கிளம்பும் மூலக்கனலான ஆலால விஷமே ஸஹஸ்ராரத்தை அடையும்போது அமிர்தமாகிறது. புஷ்பங்களில் சிறந்தது ஜாதிமல்லி மலர். பாணங்களில் சிறந்தது பாசுபதம். தேவர்களில் சிறந்தவர் மகாதேவன். மகாதேவ மந்திரங்களில் சிறந்தது பஞ்சாட்சரம். யஜுர் வேதத்தின் ஏழு காண்டங்களின் நடுவில் உள்ள நான்காவது காண்டத்தில் உத்தமமான ஐந்தாவது ப்ரச்னமான ஸ்ரீருத்ரத்தின் நடுவே நமசிவாய எனும் மந்திரம் அமைந்துள்ளது. அதன் நடுவே ரத்னம் போல் சிவ எனும் நாமம் விளங்குகிறது. அப்பர் தேவாரத்தில், 100 பதிகங்கள் கொண்ட
5ம் திருமுறையில் 51வது பதிகத்தின் நடுவில் சிவாய என்ற பஞ்சாட்சரம் அமைந்துள்ளது.
அதே போன்று லலிதா ஸஹஸ்ரநாமம் எனும் 1000 ரத்னங்களாலான மாலையில் நடுநாயகமாக யோகினி வைபவம் 475 முதல் 534வது நாமா வரை பேசப்படுகிறது. பூமி, அக்கினி, ஜலம், வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதத்வம் அடங்கிய மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி என்ற 5 ஸ்தானங்களுள் நடுநாயகமான மணிபூரக சக்கரத்தில் விளங்கும் ‘மாம்ஸநிஷ்டா’, ‘குடான்னப்ரீதமானஸா’ என்ற நாமாக்கள் இந்த ரத்ன மாலையின் பதக்கமாக உள்ளது. தேவி உபாசனையில் மாமிசத்திற்குப் பதில் குடான்னம் எனும் உளுந்து சாதம் நிவேதிக்கப்படுகிறது. அந்த ஆறு ஆதார தேவியரும் மனோன்மணியில் அடக்கம். நினைத்ததை நினைத்த வண்ணம் நிறைவேற்றித்தரும் மனோன்மணியின் பாதங்களைப் பற்றி நாம் வளம் பல பெறுவோம்.